My Daily Strength

தீமைகளிலிருந்து விடுதலை -- Rev. Dr. ஜெ. சாமுவேல் சுதாகர்

இன்றைய தியானம் : 'கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து.. காப்பாற்றுவார்' 2 தீமோத்தேயு 4:18

அப்போஸ்தலனாகிய பவுல், தன் வாழ்க்கையில் கர்த்தர் கொடுத்த மாபெரும் விடுதலையைக் குறித்துச் சாட்சி கூறுகிறார். 'கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்' என்று வல்லமையான தமது சாட்சியைத் தைரியமாக எடுத்துக் கூறுகிறார். மாபெரும் அப்போஸ்தலனாகிய பவுல் கூறிய இந்த அறிக்கை, வல்லமையான சாட்சி அன்றோ?'கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, அக்கறை சேர்த்து பொற்தள வீதியில் உலாவும் வரை என்னைக் காப்பாற்றுவார்' என்று நீங்களும் நானுங்கூட தைரியமாய்க் கூறலாமே! சர்வ வல்ல தேவனாகிய அவருக்கே துதியும் கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக.

அன்பான தேவ பிள்ளையே ஜீவனுள்ள தேவனுக்குச் சாட்சியாக இப்பூமியில் வாழ்வது மிகவும் சவாலான ஒன்றாகும். ஏனெனில், 'இந்த உலகத்தில் உங்களுக்கு உபத்திரவமுண்டு என் நாமத்தினிமித்தம் நீங்கள் அனைவராலும் பகைக்கப்படுவீர்கள்' என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார். ஆனாலும், 'உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக. இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்' என்று கூறி அவர் நம்மைப் பெலப்படுத்துகிறார். கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் கட்டளையிட்ட மாபெரும் விடுதலையினிமித்தம், இன்று நீங்கள் இந்தப் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள். தேவனுக்கு முன்பாக நீங்கள் எவ்வாறு காணப்பட்டீர்கள் என்பதையும் அவர் உங்களை எவ்வாறு மாற்றியிருக்கிறார் என்பதையுங்குறித்து சற்றே சிந்தித்துப் பாருங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய விலையேறப் பெற்ற இரத்தத்தின் மூலமாக பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்தும் சாபத்தின் பிடியிலிருந்தும் உங்களை விடுவித்திருக்கிறார். மட்டுமின்றி, பரிசுத்த ஆவியானவராகிய தேற்றரவாளன் ஒவ்வொரு நாளும் நீங்கள் நடக்கவேண்டிய சரியான பாதையில் உங்களை நடத்திச் செல்லுகிறார்.

உங்களுக்குள் காணப்படும் அபிஷேகம் எல்லா நுகங்களையும் முறிக்கும். உங்கள் வாழ்க்கையில் காணப்படும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சாட்சியைக் கொண்டு முன்னேறிச் செல்லுங்கள். தம்முடைய மகிமையுள்ள இராஜ்ஜியத்தில் காணப்படும் வரை சகலவித தீமைகளுக்கும் நாசமோசங்களுக்கும் உங்களைத் தப்புவிக்கிற கர்த்தர் உங்களை ஆளுகிறபடியால் செல்லுமிடமெங்கும் அவருடைய சாட்சியைச் சுமந்து செல்லுங்கள். தேவன் உங்களுக்குத் தந்த விடுதலைக்காக குடும்பமாய் அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு நன்றி செலுத்துங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிமித்தம் மகிழ்ச்சியும் சந்தோஷமும் சமாதானமும் உங்கள் இருதயத்தை ஆட்கொண்டுள்ளன.

ஜெபம் : கர்த்தாவே நீர் எனக்குத் தந்த மாபெரும் விடுதலைக்காக உமக்கு நன்றி. ஆமென்.


சிந்திக்க : விடுவிக்கப்பட்ட ஆத்துமாக்கள் தேவனுக்கு நன்றியோடிருக்கின்றன.